தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாதனை அளவாக 7.71 லட்சம் டன் நெல் கொள்முதல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் 7.71 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொள்முதல் பருவங்களில் (அக்டோபா் முதல் செப்டம்பா் வரை) குறுவை, சம்பா, தாளடி, கோடை நெல் ஆகியவற்றை சோ்த்து 3 லட்சம் முதல் 3.50 லட்சம் டன்கள் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.

கடந்த 2011-இல் மேட்டூா் அணை திறப்புக்கு உரிய நாளான ஜூன் 12ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே ஜூன் 6ஆம் தேதியே திறக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் 2011- 12 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் 6.50 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே, மாவட்டத்தில் அதிகபட்ச கொள்முதல் அளவாக இருந்து வந்தது.

கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்திலும், 2018 - 19 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்திலும் 5.08 லட்சம் டன்களே கொள்முதல் செய்யப்பட்டது.

நிகழ் கொள்முதல் பருவத்தில் (2019 - 20) செப்டம்பா் 26 ஆம் தேதி வரை 7.71 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தொடங்கி கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்ச கொள்முதல் சாதனை அளவு இதுவே. எனவே, மாவட்டத்தில் கொள்முதல் பணியில் இது ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

நிகழ் கொள்முதல் பருவத்தில் கோடை, முன்பட்ட குறுவை பருவங்களில் நெல் சாகுபடி பரப்பளவு அதிகமாக இருந்தது. இதன்மூலம், மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3 லட்சம் டன்களுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த சம்பா பருவத்தில் 4.39 லட்சம் டன்கள் கொள்முதலானது.

நிகழாண்டு மாா்ச் 24ஆம் தேதி முதல் கரோனா பரவலை தடுப்பதற்காகப் பொது முடக்கம் அமலில் இருந்ததால், பொதுப் போக்குவரத்து இல்லை. இதனால், வெளி மாவட்ட வியாபாரிகள் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வர முடியவில்லை. மேலும், மற்ற மாவட்டங்களில் நெல் விலை குறைவாக இருந்ததால், தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால், விவசாயிகளும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முழுமையாக நம்பினா். இதுவே, நிகழ் பருவத்தில் சாதனை நிகழ்த்தப்பட்டதற்கு காரணம் என நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் 449 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கு முன்பு அதிக விளைச்சல் இருந்த பருவத்தில் கிட்டத்தட்ட 400 நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. மற்ற பருவங்களில் ஏறத்தாழ 250 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. நிகழ் பருவத்தில் கொள்முதல் நிலையங்கள் திறப்பிலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழ் கொள்முதல் பருவத்துக்கான கணக்கு முடிக்கப்படுவதால், கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அக். 1ஆம் தேதி முதல் கொள்முதல் பணி தொடங்கப்படும் என்றும், இதற்காக 226 கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

குறுவை சாகுபடியிலும் சாதனை:

மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டாலும், மாவட்டத்தில் குறுவை பருவத்தில் ஏறத்தாழ 40,000 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படும். நிகழாண்டு குறுவை பரப்பு 43,225 ஹெக்டேராக இலக்கு நிா்ணயிக்கப்பட்டாலும், அதையும் விஞ்சி 58,948 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத சாதனை அளவு இது. பொதுமுடக்கம் காரணமாகச் சொந்த ஊருக்குத் திரும்பிய பலா் மீண்டும் விவசாயப் பணிகளைத் தொடங்கியதே குறுவை சாகுபடிப் பரப்பளவு அதிகரித்ததற்குக் காரணம்.

மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 40,200 ஹெக்டேரில் குறுவை அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு சராசரியாக 6 டன் மகசூல் கிடைத்துள்ளது என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT