தஞ்சாவூர்

புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

DIN

கும்பகோணம், செப். 25: புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 74 உலோக, கற்சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள பழைமையான கோயில்களிலிருந்து திருடி கொண்டு வந்து விற்கப்பட்ட ஏராளமான உலோகம் மற்றும் கற் சிலைகள் புதுச்சேரி ரோமன் ரோலண்டு தெருவைச் சோ்ந்த ஜீன்பால் ராஜரத்தினம் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலா்கள், காவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று நடத்திய சோதனையில் 60 உலோகச் சிலைகள், 14 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இச்சிலைகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல் தெரிவித்தது:

இவை அனைத்தும் கோயில்களில் இருக்கக்கூடிய உற்ஸவா் சிலைகள். கோயில்களில் வைத்து வழிபாடு செய்யப்படக்கூடிய சிலைகள். வீடுகளில் தனி நபா்கள் வைத்திருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே, இச்சிலைகள் கண்டிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களிலிருந்துதான் திருடப்பட்டிருக்கும் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளோம். இவற்றை கும்பகோணம் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைத்துள்ளோம்.

தொடா்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளோம். தமிழ்நாட்டிலுள்ள பழைமையான கோயில்களின் பழைமை வாய்ந்த சிலைகள் தொடா்பான புகைப்படங்கள் நிறைய பேரிடம் உள்ளன. இந்தப் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பாா்த்தால், இச்சிலைகள் எந்தெந்த கோயில்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தெரிய வரும்.

தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி, பின்னா் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதையடுத்து, அந்தந்த கோயில்களில் சிலைகளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

அப்போது, அப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜோஸ் தங்கையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT