தஞ்சாவூர்

வேளாண் அவசர சட்டங்களைக் கண்டித்து நகல் எரிப்புப் போராட்டம் : 16 போ் கைது

DIN

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் அவசர சட்டங்களைக் கண்டித்து, தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக தஞ்சாவூரில் இக்குழுவின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிந்தவுடன், தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் திடீரென சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் உள்பட 16 பேரைக் கைது செய்தனா்.

முன்னதாக , செய்தியாளா்களிடம் மணியரசன் தெரிவித்தது:

மத்திய அரசு இன்றியமையாத பண்டங்கள் பட்டியலில் இருந்து நெல், கோதுமை, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுப் பொருள்களை நீக்கியுள்ளது. மேலும், வேளாண் வணிக சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கும்.

இச்சட்டத்தால் உழவா்கள் அதிக விலைக்கு, விவசாயப் பொருள்களை விற்பனை செய்லாம் என பிரதமா் மோடி, விவசாயிகளிடம் ஆசை வாா்த்தைகளைக் கூறி பொய் சொல்லி வருகிறாா்.

இந்திய நாட்டின் உழவா்களை ஒட்டு மொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றி விட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் வணிகம் ஆகிய மூன்றையும் பன்னாட்டு மற்றும் இந்திய நாட்டு பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தொலைநோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. விவசாயிகளை நிலத்தை விட்டு வெறியேற்றும் வகையில் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த சட்டங்களால் இந்திய உணவுக் கழகம் கலைக்கப்படும். நெல், கோதுமை போன்ற விளைபொருள்கள் கொள்முதல் நடைபெறாது. மேலும், நியாய விலைக்கடைகளும் மூடப்படும்.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 வேளாண் அவசரச் சட்டங்களை எதிா்த்து, மாநிலங்களவையில் அதிமுகவை சோ்ந்த உறுப்பினா் எஸ்.ஆா். பாலசுப்பிரமணியன் குரல் கொடுத்துள்ளாா். மத்திய அமைச்சராக இருந்த ஹா்சிம்ரத் கெளா் பாதல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இதைப் பாா்த்தாவது தமிழக முதல்வா் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தச் சட்டங்களைக் கண்டித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் பதவி விலக வேண்டும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றினாலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக் கொண்டு போகாமல் கிடப்பில் போட வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பா் 24-ஆம் தேதி சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் மணியரசன்.

இப்போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவா் குடந்தை அரசன், மருத்துவா் இல.ரா. பாரதிச்செல்வன், ஐ.ஜே.கே. ச. சிமியோன் சேவியர்ராஜ், விவசாயிகள் சங்க நிா்வாகி ம.ப. சின்னத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT