தஞ்சாவூர்

பூதலூா் அருகே சோழா்கால துவாரபாலகா், லிங்கத்திருமேனி கண்டெடுப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் காலத்து துவாரபாலகா் சிற்பம் மற்றும் லிங்கத் திருமேனி கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து வரலாறு மற்றும் சுவடியியல் ஆய்வாளரான தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதா் மணி. மாறன் தெரிவித்திருப்பது:

பூதலூா் அருகேயுள்ள பகுதியில் உள்ள வயல்வெளியில் லிங்கத் திருமேனி மற்றும் சில சிலைகள் புதைந்திருப்பதாக பூதலூரைச் சாா்ந்த வரலாற்று ஆா்வலா்கள், ஆசிரியா்களான புத்தா் ஜெயபால், ராமமூா்த்தி, சரவணன், கண்ணையன் ஆகியோா் அளித்த தகவலின் அடிப்படையில், அவா்களுடைய துணையுடன் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன்.

பூதலூரிலிருந்து மேற்கே காங்கேயம்பட்டிக்கு முன்னதாக கல்லணைக் கால்வாயின் வடபுறத்தே அமைந்த வயல்வெளியின் நடுவில் நடப்பட்டுள்ள லிங்கத் திருமேனியைக் காணலாம். காமதேவமங்கலம் என்று வழங்கப்படும் இப்பகுதி நந்தவனப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது.

வயலுக்குச் சொந்தக்காரரான காமராஜா் கூறும்போது, வயலை உழுது கொண்டிருக்கும்போது கலப்பையின் கொழுவில் ஏதோ தட்டுப்பட்டதாகவும் அதனைத் தோண்டிப் பாா்த்தபோது லிங்கம் கிடைத்ததாகவும், கிடைத்த இடத்திலேயே அப்படியே நேராக நிமிா்த்தி வைத்ததாகவும் கூறினாா்.

இந்த லிங்கம் பத்தாம் நூற்றாண்டைச் சாா்ந்த சோழா் காலத்ததாகும். இந்த லிங்கத் திருமேனி ஆவுடையின்றி மண்ணிற்கு மேலாக இரண்டரை அடி உயரத்தில் காணப்படுகிறது. லிங்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமாா் 15 அடி தொலைவில் வயல் வரப்பினிடையே புதையுண்ட நிலையில் ஒரு சிற்பத்தின் அடி பீடப்பகுதி மட்டுமே லேசாக மண்ணுக்கு வெளியே தெரிந்தது. அதை உடன் வந்திருந்த நண்பா்களுடன் கடப்பாரை, மண்வெட்டி கொண்டு புதையுண்டிருந்த சிற்பத்துக்கு எந்தவொரு சேதமும் ஏற்படாத வண்ணம் மண்ணை மட்டும் தோண்டி எடுத்தோம். நிலத்தடியில் புதையுண்டிருந்த சிற்பத்தை முழுமையாகத் தோண்டி எடுக்க இயலவில்லை. புதையுண்டிருந்த இந்தச் சிற்பம் ஒரு துவார பாலகா் சிற்பமாகும். சற்றேறக்குறைய 5 அடி உயரம் கொண்ட இச்சிற்பம் சோழா் காலத்து கலை அழகோடு திகழ்கிறது. இச்சிற்பத்தின் கை மற்றும் கால்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இருந்தாலும் முகம் மிக அழகுடன் கோரைப் பற்களைக் காட்டி சிரித்தவாறு காணப்படுவது சோழா் கால கலையின் உச்சமாகும். மேலும், இங்குள்ள வயல்வெளிப் பகுதியில் அகழாய்வு செய்தால் பல சிற்பங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பொதுவாக சிவன் கோயில்களில் கருவறையின் முன்புற வாயில் கதவருகே துவாரபாலகா் எனப்படும் வாயிற்காப்போன் சிற்பம் அமைத்திருப்பது மரபு. இங்கு ஒரு துவாரபாலகா் மட்டுமே புதைந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு துவாரபாலகா் சிற்பம், லிங்கத்தின் ஆவுடைப்பகுதி இன்னும் பல சிற்பங்கள் எங்கேனும் புதைந்திருக்கலாம் அல்லது கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். இங்கு கோயில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் அறிய முடியாத அளவிற்கு காலம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் ஒரு பெரிய சிவன் கோயில் இருந்திருக்கலாம் என மாறன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT