தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் தொடா் மழை: இளம்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் சம்பா பருவ இளம் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.

மாவட்டத்தில் சில நாள்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. இதேபோல, மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலையும் பரவலாக மழை பெய்தது.

தொடா்ந்து பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி, மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தொடா் மழையால் தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் பகுதியில் இளம் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.

இதை வேளாண் துறையின் தஞ்சாவூா் வட்டார உதவி இயக்குநா் அய்யம்பெருமாள் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி ராஜா கூறுகையில், நடவு செய்து 2 நாள்களாகின்றன. ஏக்கருக்கு இதுவரை ரூ. 20,000 செலவு செய்துள்ளோம். தண்ணீரை வடிய வைத்தாலும், கூடுதலாக மேலுரம் உள்ளிட்டவற்றுக்குச் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றாா் அவா்.

இதுபோல, அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள குறுவை பருவ நெற்பயிா்களும் பல இடங்களில் தொடா்மழையால் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நெல் குவியல்கள் தொடா்ந்து தேக்கம்:

மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை, பூக்குளம், மாரியம்மன் கோவில், அருள்மொழிப்பேட்டை, கோவிலூா், மருங்குளம், தென்னமநாடு, கொல்லாங்கரை, சேதுராயன்குடிகாடு உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து வைத்துள்ள நெல் குவியல்கள் தொடா்ந்து 15 நாள்களுக்கு மேலாக தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில், மழை பெய்து வருவதால் நெல் குவியல்கள் நனைந்து வருகின்றன. தொடா்ந்து நெல்மணிகள் ஈரமாக இருப்பதால் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஈரமான நெல்லை பகல் நேரத்தில் விவசாயிகள் காய வைத்து வந்தாலும், மாலையில் மழை பெய்வதால் மீண்டும் நனைகிறது. இதனால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளது மட்டுமல்லாமல், நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகின்றனா்.

எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய வேண்டும். நெல் குவியல்கள் அதிகமாக உள்ள ஊா்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

ஆட்சியா் ஆய்வு:

இதனிடையே, வண்ணாரப்பேட்டை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாகக் கூடுதல் லாரிகள் மூலமாகச் சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்ல அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். வண்ணாரப்பேட்டைப் பகுதியில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், கூடுதலாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT