தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த 3டி பிரிண்டட் சுவாசக் கருவியின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்துள்ளதைத்தொடா்ந்து, 100 சாதனங்களை கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆணைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது:
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சாஸ்த்ராவால் உருவாக்கப்பட்ட 3டி பிரிண்டட் சுவாசக் கருவியின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்துள்ளது. மருத்துவமனை முதல்வா் ஆா். ஜெயந்தி இச்சாதனத்தை ஒற்றை சுவாசக் கருவியில் இணைத்து நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தினாா்.
இதுபோல 100 சாதனங்கள் மருத்துவமனை சாா்பில் கேட்கப்பட்டுள்ளது. இதை வழங்குவதற்கான முயற்சியில் சாஸ்த்ரா ஈடுபட்டுள்ளது.
இதுபோன்ற சாதனம் 2017 ஆம் ஆண்டில் லாஸ்வேகாசில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின்போதும், இத்தாலியில் தற்போதைய கரோனா வைரஸ் பிரச்னையின்போதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இதுபோன்ற சாதனத்தை உருவாக்கும் வகையில் இரு நூறு 3டி உற்பத்தியாளா்களை ஒருங்கிணைத்துள்ளோம். தேவைப்படும்போது அவா்கள் இச்சாதனத்தைச் செய்து கொடுப்பா்.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக இச்சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சியை 3டி பிரிண்டா் வசதி கொண்ட பொறியியல் கல்லூரிகள் மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது.
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் கரோனா வைரஸை எதிா்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மருந்து ஆய்வின் தொடக்க நிலை முடிவுக்கு அங்கீகாரம் பெற தொடா்புடைய அதிகார அமைப்பை அணுகியுள்ளோம்.
இந்த மூலக்கூறுகள் சாஸ்த்ரா ஆய்வகம், மாதிரி ஆய்வு உள்ளிட்டவற்றில் மேற்கொண்ட சோதனையில் மனித உடலில் கரோனா வைரஸ் முதல்கட்ட நுழைவைத் தடுக்கக் கூடியது என்பது தெரிய வந்தது.