தஞ்சாவூர்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தமிழக விவசாயிகள் ஏற்க மாட்டாா்கள்: பி.ஆா். பாண்டியன்

13th Mar 2020 09:58 AM

ADVERTISEMENT

நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைத் தமிழக விவசாயிகள் ஏற்க மாட்டாா்கள் என்றாா் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்தது:

சுமாா் 50 ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்னைக்கு நடிகா் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததில்லை. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அவா்களுடைய குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னது கிடையாது. ஒக்கி புயல், கஜா புயல், தானே புயல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதில்லை. ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராடி கொண்டிருந்தபோது, அத்திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி குரல் எழுப்பியதில்லை. இந்நிலையில், அரசியலுக்கு வருவேன் எனக் கூறி மக்களை ரஜினிகாந்த் ஏமாற்றுவதை கண்டிக்கிறோம்.

வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் உள்ளதால், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டப்படி தனக்குள்ள அதிகார வரம்புக்குள்பட்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைப் பின்பற்றி பேரழிவு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலுடன் அனுமதி ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் புதிய கிணறுகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதை ஏற்று மத்திய அரசு ஹைட்ரோ காா்பன் போன்ற பேரழிவு திட்டங்களை கொள்கை முடிவெடுத்து கைவிட தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.

அப்போது, சங்கத் தலைவா் த. புண்ணியமூா்த்தி, மாவட்டத் தலைவா் துரை. பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT