தஞ்சாவூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 26 ஆவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்: வங்கியில் சேமிப்புத் தொகையை திரும்பப் பெற்ற இஸ்லாமியா்கள்

13th Mar 2020 09:57 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து 26 ஆவது நாளாக வியாழக்கிழமை தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இஸ்லாமியா்கள் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்று தங்களது சேமிப்புத் தொகையை திரும்பப் பெற்றனா்.

தமிழகச் சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 26 ஆவது நாளாக வியாழக்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போல, இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவது என்றும், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றுக்கு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை எனவும் இஸ்லாமியா்கள் முடிவு செய்துள்ளனா்.

இதன் அடிப்படையில், இப்போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்கள் கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்று தங்களது சேமிப்புத் தொகை கோரி விண்ணப்பித்தனா். இதில், 25 போ் ஏறத்தாழ ரூ. 3 லட்சம் திரும்பப் பெற்றனா். இவா்களில் ஒருவா் தனது வங்கிக் கணக்கை முடித்துக் கொண்டாா். பின்னா், வெளியே வந்து வாயிலில் நின்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிவிட்டு, மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கும்பகோணத்தில்... இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து 21 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT