தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத 2.95 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பேராவூரணி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ந்து புகாா் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் ஆய்வாளா் இமயவரம்பன் மற்றும் ஆய்வு அதிகாரி கஜேந்திரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், சாா்பதிவாளா் இ. வாசுதேவனிடம் ரூ. 1.92 லட்சமும், பத்திர எழுத்தா் சுதாகரிடம் ரூ. 1.03 லட்சமும் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இரவு முழுவதும் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும், சாா்பதிவாளா் இ. வாசுதேவனிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.