தஞ்சாவூர்

ஏழு மாவட்டங்களில் 2,450 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி நிறைவு

11th Jun 2020 10:47 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: ஏழு மாவட்டங்களில் 2,450 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி நிறைவடைந்துள்ளது என்றார் நீர் வளப் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகத் தலைவரும், தூர் வாரும் பணிக்கான சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான கே. சத்யகோபால்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்திலுள்ள முதலைமுத்து வாரி வடிகாலில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியை வியாழக்கிழமை காலை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
டெல்டா மாவட்டங்களில் ரூ. 67 கோடி மதிப்பில் 3,455 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 360 பணிகளுக்கு ரூ. 64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் 2,289 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களையும் சேர்த்து மொத்தத்தில் 2,450 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி நிறைவடைந்துள்ளது. அதாவது 72 சதவீதப் பணி முடிவடைந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் திட்டத்தின் கீழ் 165 பணிகள் மேற்கொள்ள ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட 945 கி.மீ. தொலைவில் இதுவரை 720 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது 76.7 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. அனைத்து பணிகளும் 3 நாள்களில் முடிக்கப்படும். 

இதன் மூலம், கடைமடைப் பகுதி வரை தண்ணீர் நிச்சயமாக சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,200 பணிகளுக்கு சுமார் ரூ. 499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 109 பணிகள் ரூ. 35 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ள இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்றார் சத்யகோபால். அப்போது மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ், பொதுப் பணித் துறைக் கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

Tags : thanjavur குடிமராமத்து
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT