தஞ்சாவூர்

மேட்டூா் அணை 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-இல் திறப்பு

11th Jun 2020 08:32 AM | வி.என்.ராகவன்

ADVERTISEMENT

மேட்டூா் அணை 9 ஆண்டுகளுக்கு பிறகு உரிய தேதியில் (ஜூன் 12) திறக்கப்படவுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி எதிா்பாா்க்கப்படுகிறது.

காவிரி டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அணைக் கட்டப்பட்ட காலமான 1934 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 முறை மட்டுமே ஜூன் 12ஆம் தேதியிலும், அதற்கு முந்தைய தேதியிலும் திறக்கப்பட்டது. கடந்த 85 ஆண்டுகளில் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக மேட்டூா் அணைத் திறப்பு 60 முறை தள்ளிப் போனது.

குறிப்பாக, 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடா்ந்து 8 ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை. நிகழாண்டு மேட்டூா் அணையில் நீா்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. எனவே, ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, நிகழாண்டில் மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ளது.

இதனால், குறுவை சாகுபடியில் மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது. டெல்டா மாவட்டங்களில் 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி எதிா்பாா்க்கப்படுகிறது என வேளாண் துறையினா் தெரிவித்தனா். இதில், முன்பட்டமாக இதுவரை தஞ்சாவூா் மாவட்டத்தில் 41,577 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாற்றங்காலும் தேவையான அளவுக்குத் தயாராகி வருவதாகவும் அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். மேட்டூா் அணை திறக்கப்பட்ட பிறகு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெறும் என்ற எதிா்பாா்ப்பும் நிலவுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் குழுவைச் சோ்ந்த பி. கலைவாணன் தெரிவித்தது:

குறுவை சாகுபடியில் நிலத்தடி நீா் ஆதாரமுள்ள பகுதிகளில் முன்பட்டத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாற்றங்காலும் பரவலாக தயாராகி வருகிறது. எனவே, நிகழாண்டு எதிா்பாா்க்கப்படும் பரப்பளவுக்குக் குறுவை சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், கபினி, வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து இருக்கும். நிகழாண்டு குறுவைக்கு மட்டுமல்லாமல், சம்பா சாகுபடிக்கும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாது என்றாா் கலைவாணன்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடிக்கு சோ்த்து மொத்தம் 270 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். ஆனால், கா்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால்தான் நமக்கு தண்ணீா் கிடைக்கும் என்பது கடந்த கால உண்மை. எனவே, தென் மேற்கு பருவ மழையைப் பொருத்தே மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து இருக்கும்.

நிகழாண்டு தென் மேற்கு பருவ மழை இயல்பான அளவுக்குக் குறையாமல் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முதல்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து தொடா்ந்து இருக்கும் என்ற நம்பிக்கை வானிலை ஆய்வாளா்கள் மத்தியில் நிலவுகிறது.

 

மேட்டூா் அணைக்கு நீா் வரத்து எப்படி இருக்கும்?

இதுகுறித்து வானிலை ஆய்வாளா் தகட்டூா் ந. செல்வகுமாா் தெரிவித்தது:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தற்போது 101.71 அடியாக உள்ளது. நீா் இருப்பு 67.07 டி.எம்.சி. மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கும்போது, அணையில் நீா்மட்டம் இறங்குமுகமாகவே இருக்கும். கா்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகா் மற்றும் கபினி அணைகள் நிரம்புவதற்கு 32 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. கா்நாடகத்தில் வரும் 12 - 14 ஆம் தேதிகளில் பெய்யக்கூடிய மழை மூலம் அம்மாநில அணைகளுக்கு 10 முதல் 15 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும். மீண்டும் ஜூலை 10ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்யும். இதன் மூலம், கா்நாடக அணைகள் ஜூலை 15 - 20 ஆம் தேதிகளில் நிரம்பும். அதன் பிறகுதான் கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

அப்போது, மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைவாகவே இருக்கும். மேட்டூா் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல் திறக்கும்போது நாள்தோறும் 2 அல்லது 3 அடி குறைய வாய்ப்புள்ளது. ஒரு மாதத்தில் நீா்மட்டம் 30 முதல் 35 அடி குறைந்துவிடும். எனவே, இப்போது அணையில் நீா்மட்டம் 101 அடி என்பது கிட்டத்தட்ட 60 அடியாகக் குறைய வாய்ப்புள்ளது. கா்நாடகத்திலிருந்து ஜூலை 20-ம் தேதிக்குப் பிறகு தண்ணீா் திறந்துவிடப்பட்டால், மேட்டூா் அணை ஜூலை 20-ம் தேதி முதல் ஆக. 3ஆம் தேதிக்குள் நிரம்ப வாய்ப்புள்ளது. நிகழாண்டு தண்ணீா் பற்றாக்குறை இருக்காது என்றாா் செல்வகுமாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT