தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே மருத்துவரை தாக்கி நகைகள் கொள்ளை

8th Jun 2020 10:48 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மருத்துவரைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் மணிமாறன். இவரும், இவரது மனைவி சுதாவும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பொழுதுபோக்குக்காக காரில் புறவழிச்சாலைக்குச் சென்றனர். அப்போது வண்ணாரப்பேட்டையிலுள்ள கல்லணைக் கால்வாய் பாலத்தில் இருவரும் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர், இவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டினர். பின்னர், மணிமாறனை  மர்ம நபர்கள் பாலத்துக்குக் கீழே அழைத்துச் சென்று, அவரது தலையில் பீர் பாட்டிலால் தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் சங்கிலி மற்றும் கைச்சங்கிலியைப்  பறித்தனர். இதையடுத்து சுதா கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். 

இதில் சுதாவின் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT