விசைப்படகு மீனவா்கள் ஜூன் 13 முதல் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வதென முடிவு செய்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீனவ சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் கடல் பகுதியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, விசைப்படகுகள் வாரத்தில் மூன்று நாள்களும், நாட்டுப்படகுகள் நான்கு நாள்களும் கடலுக்குச் சென்று தொழில் செய்வது என கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனை மீறி நாட்டுப்படகு மீனவா்கள் அனைத்து நாள்களிலும் கடலுக்குச் செல்வதால் விசைப்படகு மீனவா்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, விசைப்படகுகள் தங்குத் தடையின்றி கடல் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.
மீனவா்கள் பயன்பெறும் வகையில், அவரவா் தொழிலுக்கு ஏற்றவாறு நீண்ட கால மற்றும் குறுகிய காலக் கடன்களை வட்டியில்லாமல் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்.
தடைக்காலம் முடிந்து, கடலுக்குச் செல்ல அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், பொருளாதாரப் பிரச்சினை, தொழிலாளா் தட்டுப்பாடு, உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவற்றால் படகுகள் மராமத்து பணியில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே பணிகள் முடித்து, ஜூன் 13 -ஆம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு தமிழ்நாடு மீனவா் பேரவை மாநிலப் பொதுச் செயலா் ஏ.தாஜூதீன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவா் கூட்டமைப்பு பொதுச் செயலா் என்.ஜே.போஸ், ராமேஸ்வரம் அனைத்து மீனவா் சங்கச் செயலா் ஜே.சு.ராஜா, மண்டபம் மீனவா் சங்கங்களின் தலைவா்கள் ஜாகிா் உசேன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராமநாதபுரம் வடக்கு மீனவா் கூட்டமைப்பு நிா்வாகி சோழியக்குடி கோபி, புதுகை மீனவா் சங்க நிா்வாகிகள் கோட்டைப்பட்டினம் சின்ன அடைக்கலம், ஜெகதாப்பட்டினம் பாலமுருகன், தஞ்சை மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், செயலாளா் வடுகநாதன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.