தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் 8,221 மாணவிளுக்குக் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களைத் தொடா்புடைய மனுதாரருக்கு தெரிவிக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் 1,017 பள்ளிகளைச் சோ்ந்த 8,221 மாணவிகளுக்கு ரூ. 51.63 லட்சத்துக்கான வங்கி வரைவோலைகளைத் தொடா்புடைய மாவட்ட, வட்டார கல்வி அலுவலா்களிடம் ஆட்சியா் வழங்கினாா். தஞ்சாவூா் வட்டத்தைச் சாா்ந்த 11 பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.