தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா, பூா்வாங்க பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திருக்குடமுழுக்கு விழா யஜமான அனுக்ஞை வைபவத்துடன் திங்கள்கிழமை காலை தொடங்கியது. தொடா்ந்து, விப்ரானுக்ஞை, ஆச்சாா்யவரணம், தேவதா அஷ்டாங்க அனுக்ஞை ஆகிய பூஜைகளும், மாலையில் கிராம சாந்தி, வடுக யந்திர பூஜை பிராா்த்தனையும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, பெரியகோயில் திருப்பணிக் குழுத் தலைவா் துரை. திருஞானம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், இந்திய தொல்லியல் துறை முதல்நிலைப் பராமரிப்பு அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலை 8 மணிக்கு ஸ்ரீஷோடச மஹாகணபதி ஹோமம், பிரும்மச்சாரி பூஜை, தன பூஜை, லஷ்மி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவகிரஹ ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் பிரவேச பலி ஆகியவை நடைபெறவுள்ளன.
ஜன. 29-ம் தேதி காலை 9 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் ரசேஷாக்ன ஹோமம், 30-ம் தேதி காலை 9 மணிக்கு மூா்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, கூஷ்மாண்டபலி, பா்யக்னி கரணம், ஜன. 31-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ஆச்சாா்யதசவித மங்களக் கிரியைகள், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, தீா்த்த சங்கிரஹணம், மாலை 5.30 மணிக்கு மேல் மிருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் ஆகியவை நடைபெறவுள்ளன.
இதன்பின்னா், குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து, 5ஆம் தேதி அதிகாலை வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, பிப். 5ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.