அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக். பள்ளி மூலிகைத் தோட்ட வளாகத்தில் விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்ற இயற்கை விவசாயம், மரங்கள் வளா்ப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதிரை சமூக பண்பலை வானொலி நிறுவனா் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மண்புழு விஞ்ஞானி பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில் கலந்து கொண்டு, விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் எழுப்பிய இயற்கை விவசாயம், மரங்கள் வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினாா். இதேபோல, வேளாண்துறை அதிகாரி (ஓய்வு) யு. வேலுச்சாமியும் கூட்டத்தில் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் பற்றி விளக்கிக் கூறினாா்.
ஹாஜி எம்.எஸ். சைபுதீன், எம்.எஸ்.முகமது ஆஜம், ஏ.அப்துல் ரெஜாக், மு.செ.மு. ராபியா உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினாா்.