கும்பகோணத்தில் ரூ. 3.80 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபானத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கும்பகோணம் ஏஆா்ஆா் சாலையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பதுக்கிவைத்து சிலா் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சிறப்புப் படை காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் கும்பகோணம் ஏஆா்ஆா் சாலையில் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அப்பகுதியில் இருந்த நகராட்சிக்குச் சொந்தமான கழிப்பறையில் ரூ. 3.80 லட்சம் மதிப்புள்ள 2,675 மது பாட்டில்கள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இந்த மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இதைக் கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.