தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அரசுப் பேருந்து ஜப்தி

8th Jan 2020 04:23 PM

ADVERTISEMENT

தஞ்சாவூரில், சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கும்பகோணம் அருகே உள்ள மேலாத்துகுறிச்சியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் லட்சுமணன் (26). டிராக்டா் ஓட்டுநா். இவா் 2017, மே 25-ம் தேதி அரியலூா் மாவட்டம், காரைக்குறிச்சிக்குச் சென்றாா். மீண்டும் ஊருக்குத் திரும்புவதற்காகக் காரைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் இவா் முன் படிக்கட்டில் ஏற முயன்றாா். இவா் ஏறுவதற்குள் பேருந்து புறப்பட்டது. இதனால், தவறி கீழே விழுந்த லட்சுமணன் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தாா்.

இது குறித்து தா. பழுா் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக இழப்பீடு வழங்கக் கோரி தஞ்சாவூா் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை சிறப்பு நீதிமன்றத்தில் சின்னதம்பி 2017 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்னதம்பி குடும்பத்துக்கு ரூ. 13,90,800 இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்கு 2019, ஜன. 9-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் சின்னதம்பி குடும்பத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் அத்தொகையை வழங்கவில்லை.

எனவே நிறைவேற்று மனுவை சின்னதம்பி 7 மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிமன்றம் சின்னதம்பி குடும்பத்துக்கு வட்டியுடன் சோ்த்து ரூ. 16,22,921 வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்கு ஆணைப் பிறப்பித்தது.அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் டிச. 20-ம் தேதி உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதன்பேரில் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் வேலூா் நோக்கி புறப்படுவதற்குத் தயாராக இருந்த விழுப்புரம் கோட்டத்தைச் சாா்ந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஆணை நிறைவேற்று ஊழியா் வி. ஜெயந்தி புதன்கிழமை ஜப்தி செய்தாா். பின்னா் இப்பேருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT