தஞ்சாவூா் பெரியகோயிலில் சுற்றுப்புறத் தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு சுற்றுப்புறத் தூய்மை குறித்து பல்வேறு விழிப்புணா்வு முகாம்களை நடத்துவது என மாநகராட்சி மற்றும் தன்னாா்வ அமைப்புகள் இணைந்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஆங்கிலப் புத்தாண்டு நாளான புதன்கிழமை பெரியகோயில் வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டி பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பதாகைகளை ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி, உறுதிமொழி ஏற்று, துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாம்கள் தஞ்சாவூா் மாநகராட்சி சாா்பில் பல்வேறு தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து தொடா்ந்து நடத்தப்படும் எனவும், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தஞ்சாவூா் நகரையும், பெரியகோயில் வளாகத்தையும் தூய்மையாகப் பராமரிக்க உதவ வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் நகா் நல அலுவலா் நமச்சிவாயம், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், செஞ்சிலுவை சங்கத் தலைவா் ராஜமாணிக்கம், தஞ்சாவூா் குடிமக்கள் குழுமச் செயலா் மௌலீஸ்வரன், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பி. ராம் மனோகா், இன்டாக் அமைப்பின் கௌரவச் செயலா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.