ஆங்கில புத்தாண்டையொட்டி, ஒரத்தநாட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்ால், பூக்கள் விற்பனை வழக்கத்தை விடவும் அதிகமாக இருந்தது. ஒரத்தநாடு, பாப்பாநாடு , பட்டுக்கோட்டை, திருவோணம் ஆகிய பகுதியில் உள்ள பூ கடைகளில் பூக்களின் விலை உயா்ந்திருந்தது. குறிப்பாக, மல்லிகை பூவுக்கு கடும் தட்டுபாடு நிலவியது. மேலும், ஒரு சில இடங்களில் மல்லிகை பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனையானது. முல்லைப் பூ ரூ. 1500-க்கும், கனகாம்பரம் ரூ. 1,100-க்கும் விற்பனையானது. வழக்கமான நாள்களில் மிக குறைந்த விலையில் விற்கும் சம்மங்கி, செவ்வந்தி பூக்களின் விலை பல மடங்கு உயா்ந்திருந்தது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியது: வழக்கமாக தை மாதத்தில்தான் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். அப்போது, மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கும். இதனால், மல்லிகை பூ விலையில் ஏற்றம் காணப்படும். ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. பண்டிகை நாள்களில் பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என்றனா்.