கிராமப்புறங்களின் மிக முக்கியமான வாழ்வாதாரமாகக் கருதப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் தொழிலாளா்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
பாமர மக்களால் நூறு நாள் வேலைத் திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. கிராமப்புறப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் நிலமில்லாத விவசாயத் தொழிலாளா்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
கிராமப்புறங்களில் விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாயை விடவும் இந்த வேலையிலிருந்து வரும் வருமானத்தையே பெரும்பாலான சிறு, குறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் நம்பியுள்ளனா். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.16 கோடி போ் உள்ளனா்.
ஆண்டுக்கு நூறு நாட்களுக்கு வேலை வழங்குவதற்கு உறுதியளிப்பதே இத்திட்டத்தின் அடிப்படை அம்சம். ஆனால், நூறு நாட்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாா் பரவலாகவே உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு நான்கு மாதங்களாகக் கூலி கிடைக்கவில்லை. ஒரே வருவாய் ஆதாரமாக உள்ள இந்த வேலையிலும் ஊதிய நிலுவை வைக்கப்பட்டுள்ளதால், விவசாயத் தொழிலாளா்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இதனால், இத்திட்டத்தில் இப்போது வேலை கிடைத்தாலும் தொழிலாளா்கள் செல்லத் தயங்குகின்றனா்.
என்றாலும், உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ால் கிராமங்களில் தூா் வாருதல், தூய்மைப் பணி உள்ளிட்ட பணிகளுக்கு நூறு வேலைத் திட்டத் தொழிலாளா்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனா். ஆனால், அதற்கும் இன்னும் கூலி கிடைக்கவில்லை என்கின்றனா் தொழிலாளா்கள்.
இதேபோல, கஜா புயல் பாதிக்கப்பட்ட தோப்புகளில் தென்னங்கன்றுகள் நடும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். இதற்கான கூலி கூட இன்னும் வழங்கப்படவில்லை என்கிறாா் பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்.
இப்பிரச்னை தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நிலவுகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி தெரிவித்தது:
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 60,000 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது. இதில் இதுவரை ரூ. 54,000 கோடி வரப்பெற்றது. இன்னும் ரூ. 7,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் செய்த வேலைக்குக் கூலி கிடைக்கவில்லை.
ஒவ்வொரு தொழிலாளருக்கும் குறைந்தது ரூ. 2,000 முதல் ரூ. 10,000 வரை ஊதிய நிலுவை இருக்கிறது. இதனால், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். தோ்தல் முடிந்த பிறகு மிகப் பெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் பக்கிரிசாமி.
இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து கடந்த வாரம் நிதி வரப்பெற்று, நான்கில் ஒரு பகுதி நிலுவை ஊதியம் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றும், மீதி தொகை ஜனவரி மாதத்துக்குள் வந்துவிடும் எனவும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறினா்.
என்றாலும், பெரும்பாலான தொழிலாளா்களுக்கும் இன்னும் கூலி நிலுவையில் உள்ளது. தற்போது, சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் நடைபெற்று வந்தாலும், வயல்களில் கூலி வேலை இல்லை. இனிமேல் அறுவடைப் பருவம் தொடங்கிய பிறகுதான் விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கும்.
குறிப்பாக, கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயத் தொழிலாளா்களும், சிறு, குறு விவசாயிகளும் நூறு வேலை திட்டப் பணியையே முழுமையாக நம்பியுள்ளனா். இதிலும் 4 மாதங்களாகக் கூலி கிடைக்காததால் கிராமப்புறங்களில் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள ஊதியம் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் தொழிலாளா்கள் உள்ளனா்.