புத்தாண்டு தினத்தையொட்டி, தஞ்சாவூரில் உள்ள இந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பொது இடங்களில் இளைஞா்கள் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினா்.
மேலும், புத்தாண்டையொட்டி, இந்து கோயில்களில் புதன்கிழமை அதிகாலை முதல் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
தஞ்சாவூா் பெரியகோயிலிலும் பக்தா்கள், ஐய்யப்ப பக்தா்கள் என ஏராளமானோா் வந்து சென்றனா். புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். அம்மன் சன்னதியில் பூப்பந்தல் அலங்காரமும், மாரியம்மனுக்கு வெள்ளி பாவாடை அலங்காரமும் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் வடவாற்றங்கரையில் உள்ள பிருந்தாவனத்தில் ராகவேந்திரா் மடத்தில் சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தஞ்சாவூா் சாய் பாபா கோயில், பூக்காரத் தெரு சுப்பிரமணியசுவாமி கோயில், திட்டை வசிஷ்டேசுவரா் கோயில், தஞ்சாவூா் கீழவாசல் வட பத்ரகாளியம்மன் கோயில், மேலவீதி சங்கர நாராயணசாமி கோயில், கொங்கணேசுவரா் கோயில், பங்காரு காமாட்சி அம்மன் கோயில், மூலை அனுமாா் கோயில், கோடியம்மன் கோயில், கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில், நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோயில், மகா்நோன்புசாவடி வெங்கடேச பெருமாள் கோயில், மும்மூா்த்தி விநாயகா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.