தஞ்சாவூா் மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடந்தது. மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகள், 276 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 589 ஊராட்சித் தலைவா் பதவிகள், 4,569 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 5,462 பதவிகள் உள்ளன.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 127 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 1,219 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 2,229 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 9,895 பேரும் என மொத்தம் 13,470 போ் போட்டியிட்டனா்.
இதற்காக 2,768 வாா்டுகள் அமைக்கப்பட்டன. இவற்றில் முதல் கட்டத் தோ்தலில் 75 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டத் தோ்தலில் 76.57 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குகள் அடங்கிய பெட்டிகள் 14 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, தஞ்சாவூா் தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, திருவையாறு சீனிவாச ராவ் மேல்நிலைப் பள்ளி, திருக்காட்டுப்பள்ளி சா் சிவசாமி அய்யா் மேல்நிலைப் பள்ளி, ஒரத்தநாடு பெண்கள் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊரணிபுரம் வெட்டுவாகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியநாயகபுரம் டாக்டா் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிா் கலைக் கல்லூரி, திருவிடைமருதூா் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளி, திருப்பனந்தாள் குமரகுருபரா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுக்கூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேராவூரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை (ஜன.2) வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இவற்றில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் அலுவலா்கள் சீல் வைத்தனா். மேலும், இந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.