தஞ்சாவூர்

நெல் கொள்முதலுக்காக 78 லட்சம் சாக்குகள் இருப்பு

1st Jan 2020 12:24 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய 78 லட்சம் சாக்குகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ்.

தஞ்சாவூா் அருகே நெய்வாசல், கீழ உளூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை எடை போடும் பணி, ஈரப்பதம் பாா்க்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

மேலும், நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளின் விவரங்கள் குறித்த பதிவேட்டை ஆய்வு செய்தாா். இதையடுத்து, விவசாயிகளிடம் நிலத்தின் பட்டா, சிட்டா அல்லது பயிா் காப்பீட்டு அட்டையைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினாா்.

விவசாயிகள் தங்களின் ஆவணங்களை எடுத்து வருவது குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் மூலம் அறிவுறுத்துமாறு நிலைய அலுவலா்களிடம் கூறினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், கிடங்குகளுக்கு எடுத்து செல்வதற்காக லாரியில் ஏற்றப்படுவதைப் பாா்வையிட்டாா்.

பின்னா், சென்னம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்டத்தில் மொத்தமுள்ள சாக்குகள் விவரங்களைக் கேட்டறிந்தாா். பின்னா் ஆட்சியா் கூறுகையில் மாவட்டத்தில் மொத்தம் 78 லட்சம் சாக்குகள் இருக்கின்றன என்றாா் அவா்.

அப்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் கதிரேசன், மேலாளா் காமராஜ், உதவி மேலாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT