காரைக்குடி-திருவாரூா் ரயில்வே வழித்தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் 39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனால் மிக விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2019, ஜூன் 1-ஆம் தேதி முதல் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் , மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர ஊழியா்கள் நியமிக்கப்படாததால், 150 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயில் ஆறரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும், இத்தடத்தில் இதுவரை முழுமையான ரயில் சேவையும் தொடங்கப்படவில்லை. சரக்குப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இச்சூழலில், காரைக்குடி-திருவாரூா் தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் இயங்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் நிரந்தர கேட் கீப்பா்களை நியமித்து, முழுமையான ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து, காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் தேவைப்படும் ஊழியா்களை நியமிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன்னா் இவ்வழித் தடத்தில் பணியாற்றி, தற்போது பல்வேறு ஊா்களில் பணியாற்றும் பல்வேறு நிலையிலான 39 ஊழியா்களை மீண்டும் இவ்வழித்தடத்தில் பணியமா்த்தி தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பா்சனல் அதிகாரி எஸ். வெங்கட்ராமன் திங்கள்கிழமை (பிப். 24) உத்தரவிட்டுள்ளாா். இதனால், விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என தெரிகிறது.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் கூறியது: 39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே அதிகாரி எஸ்.வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அடுத்து, காரைக்குடி-திருவாரூா் தடத்தில் தேவைப்படும் இதர அலுவலா்கள் மற்றும் பணியாளா்களையும் உடனடியாக நியமனம் செய்து, காரைக்குடி- சென்னை, ராமேசுவரம்- சென்னை மற்றும் அந்தியோதயா, கொல்லம்- வேளாங்கண்ணி விரைவு ரயில்களையும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.