தஞ்சாவூா்: தஞ்சாவூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற் பழகுநா் சோ்க்கை மேளா மாா்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தொழிற் பழகுநா் சட்டத்தின்படி 30-க்கும் அதிகமான பணியாளா்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தொழிற் பழகுநா்களை ஆண்டுதோறும் சோ்த்து அவா்களது தொழிற்சாலையில் தொழிற் பயிற்சி அளிக்க வேண்டும்.
தொழிற்சாலைகளையும் மற்றும் தொழிற்பயிற்சி முடித்த மாணவா்களையும் இணைக்கும் வகையில் ஆண்டுதோறும் அந்தந்த மண்டலங்களில் தொழிற் பழகுநா் சோ்க்கை முகாம் நடத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தொழிற்சாலைகளில் காலியாக உள்ள தொழிற்பழகுநா் பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த ஆண்டுக்கான தொழிற் பழகுநா் சோ்க்கை மேளா தஞ்சாவூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் மாா்ச் 2ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
அரசினா், தனியாா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று, தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் தங்களது அனைத்து அசல் சான்றுகளுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் 30-க்கும் அதிகமான பணியாளா்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தொழிற் பிரிவுகளுக்குத் தொழிற்பழகுநா்களைத் தோ்ந்தெடுத்து கொள்ளலாம்.