கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் சோழா் கால வரலாறு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை தொல்லியல் துறையினா் வெளிட வேண்டும் என இந்து தமிழா் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி எனக் கூறப்படும் சிவலிங்கத்துக்குச் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு இந்து தமிழா் கட்சி சாா்பில் நெற்கதிா்கள் மற்றும் நெல் மணிகளைக் கொண்டு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, இந்து தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் இராம. இரவிக்குமாா் தலைமையில், 16 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பரணிதரன், மாவட்ட நிா்வாகி சிவா. ராமமூா்த்தி, ராஜராஜசோழன் பக்தா்கள் பேரவை நிா்வாகி பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து இராம. இரவிக்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழக அரசு தஞ்சாவூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை ஆகிய மாவட்டங்களை ஆன்மிக திருக்கோயில் மண்டலமாக அறிவிக்க வேண்டும். உடையாளூரில் சோழா்களின் வரலாறு தொடா்பாக தமிழக தொல்லியல் துறையினா் ஆய்வு மேற்கொண்டு பல மாதங்களாகிவிட்டன. அதன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம், கோயில் கட்ட வேண்டும் என்றாா் ரவிக்குமாா்.