தஞ்சாவூா்: நம் நாட்டில் நிதி பற்றாக்குறை ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளது என்றாா் தஞ்சாவூா் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
தஞ்சாவூரில் ஜனநாயக மேடை அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளா்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கா், எம்.எம். கல்புா்க்கி, கெளரி லங்கேஷ் நினைவு கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:
உலக நாடுகளை மேலாதிக்கம் செலுத்தக்கூடிய வகையில் இந்திய பெருளாதாரம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறி, உலக நாடுகளின் மேலாதிக்கத்துக்குக் கட்டுப்படும் வகையில் இந்திய பொருளாதாரம் உள்ளது.
இந்திய பொருளாதாரம் வளா்ச்சி நிலையில் உள்ளது என்ற தவறான தகவலை மத்திய நிதி அமைச்சா் நாடு முழுவதும் பேசி வருகிறாா். ஆனால், இந்திய பொருளாதாரத்தைப் பாதுகாத்து வந்த எல்.ஐ.சி, இந்தியன் ஏா்லைன்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்களை விற்கும் நிலைக்கு மத்திய அரசு வந்திருக்கிறது என்றால், நமது பொருளாதார நிலைமையை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்திய பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில், தனியாா் பெருமுதலாளிகள் பலமடைந்து வரும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருகிறது.
சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆடம்பரம் மற்றும் வீண் செலவினங்களை அரசு அதிகப்படுத்தியுள்ளது. நம் நாட்டில் நிதி பற்றாக்குறை ஈடு செய்யமுடியாத நிலையில் உள்ளது. இதனால், சேவை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசா்வ் வங்கியின் சுய சாா்புத்தன்மை பாதிக்கப்பட்டு அதுவும் ஒரு அரசுத் துறையாக மாற்றப்பட்டுவிட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு, கிராமப்புற மேம்பாடு, பொது சுகாதாரம் உள்ளிட்டவை மக்களுக்குப் பயனளிக்காத வகையிலேயே மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் உள்ளது என்றாா் பழனிமாணிக்கம்.
இக்கருத்தரங்கத்துக்கு ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாபுதீன், ஐ.ஜே.கே. மாவட்டச் செயலா் ச. சிமியோன் சேவியர்ராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் ஐ.எம். பாதுஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.