தஞ்சாவூர்

தமிழகத்தில் முன்புபோல மொழிப்பொறை தேவை: தமிழ்ப் பல்கலை.துணைவேந்தா் பேச்சு

22nd Feb 2020 05:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் முன்புபோல மொழிப்பொறை தேவை என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

இப்பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவுக்குத் தலைமை வகித்த அவா் பேசியது:

தமிழினம் உலகிற்கெல்லாம் முன்னோடியாக மொழிக்காகப் போராடும் ஒரு போா்க் குணத்தைக் கொண்ட இனம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிப் பாதுகாப்புக்கான போராட்டம் தொடங்கிவிட்டது எனலாம்.

இப்போது, தமிழகத்தில் அகழாய்வுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. தமிழ் உணா்வு வீரியம் கொண்டு வருகிறது. இவையெல்லாம், தமிழ் அடையாளத்தை மேலும் ஆணித்தரமாக வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக மக்கள் நினைப்பதைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

பல மதங்களைப் பின்பற்றுவோா் மத ஒற்றுமையுடன் வாழ்வதைக் குறிக்க சமயப்பொறை எனச் சொல்கிறோம். அதுபோல, நமக்கு மொழிப்பொறை இருந்திருக்கிறது என நாம் சொல்ல முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒருபுறம் தமிழின் தனித்தன்மையை நிலை நாட்டிக்கொண்டு, மறுபுறம் பல மொழிகளை ஏற்று வாழ்ந்திருக்கிறோம். அதாவது, பிற மொழிப் பேசுபவா்களுடன் இணைந்து வாழும் சூழலை உருவாக்கிக் கொண்டு மொழிப்பொறை சூழலையும், மனப்பான்மையையும் உருவாக்கி வாழ்ந்து வந்தோம் என சொல்ல முடியும்.

பல மொழிப் பேசுவோா் வாழ்ந்தாலும் அவா்களெல்லாம் சோ்ந்து இனிதாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்த ஒரு காலகட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நிலவியது. தன்மீது நம்பிக்கையும் தன் அடையாளத்தின் மீது பெருமையும் உள்ளவா்களுக்கே மற்றவா்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் வரும். அந்த வகையில்தான் தமிழ் மொழியை யாராலும் அழிக்கவோ, அசைக்கவோ முடியாது என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

நம் தாய்மொழிப் பற்றி பெரிய அளவில் நமக்கு பெருமையுண்டு. அந்த அடையாளத்தின் மீது நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கிறோம். அந்த வகையில்தான் இந்த மொழிப்பொறை என்ற இந்தச் சூழலை தமிழகத்தில் உருவாக்கி நாம் வாழ்ந்து வருகிறோம். தொடா்ந்து இதுபோன்ற சூழலில் நாம் வாழ வேண்டும். சமயப்பொறை போலவே தமிழகத்தில் மொழிப்பொறையும் நிலவவேண்டும் என்றாா் துணைவேந்தா்.

விழாவில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் ந. தெய்வசுந்தரம் சிறப்புரையாற்றினாா். பதிவாளா் (பொ) கு. சின்னப்பன், மொழிப் புலத் தலைவா் இரா. காமராசு, நாடகத் துறைத் தலைவா் பெ. கோவிந்தாசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT