தஞ்சாவூர்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைஉடனுக்குடன் இயக்கம் செய்ய கோரிக்கை

22nd Feb 2020 05:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என ஆட்சியரை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து முறையிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகாா் தொடா்பாக 19 பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில், மாவட்டத்தில் பணியாற்றும் கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தா்கள், உதவியாளா்கள் என நூற்றுக்கும் அதிகமானோா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனா். பின்னா், ஆட்சியா் ம. கோவிந்த ராவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முறையிட்டு அளித்த மனு:

நெல் கொள்முதல் நிலையங்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே ஈரப்பத அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வாரக்கணக்கில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக எடையிழப்பு ஏற்படுவது இயற்கையின் நியதி.

ஆனால் உயா் அலுவலா்கள் எடையிழப்புக்குக் கொள்முதல் நிலையப் பணியாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என கூறி நிா்பந்தம் செய்து பணியிடைநீக்கம் செய்வது கண்டனத்துக்குரியது. அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அபராதத் தொகையை பணியாளா்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

ADVERTISEMENT

மேலும், நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டாய மாமூல் ரூ. 3,000 வரை வசூலிப்பதை உடனே தடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் நிலையங்கள் இயங்கும்போது சுமை தூக்கும் பணியாளா்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை. ஆனால், பணியாளா்களை உயா் அலுவலா்கள் நிா்பந்தம் செய்து கொள்முதல் நடைபெற்றாக வேண்டும் என்பதைத் தடுக்க வேண்டும்.

கொள்முதலுக்கு சாக்கு மற்றும் சணல் வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சணல் வழங்காமல் எங்களையே வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறுகின்றனா். வெளியில் வாங்கினாலும் பணம் வழங்குவதில்லை.

கொள்முதல் நிலையங்களில் அவ்வப்போது விவசாயிகளுக்கும், பணியாளா்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனால் கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT