தஞ்சாவூர்

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்பது காலத்தின் கட்டாயம்: சி. மகேந்திரன்

22nd Feb 2020 06:06 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இப்போதைய சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்பது காலத்தின் கட்டாயம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.

தஞ்சாவூரில் அனைத்து இடதுசாரி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகு தழுவிய வாசிப்பு நாள் கருத்தரங்கத்தில் அவா் பேசியது:

இந்தியாவில் இன்றைய சூழலில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இன்று பல நாடுகளில் சூழ்நிலைக்கேற்ப ஒற்றுமை அதிகமாகிறது. இது காலத்தின் கட்டாயம்.

ஒவ்வொரு நிகழ்விலும் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஊக்குவித்து வருவது மட்டுமல்லாமல், அதில் பங்கேற்கவும் செய்கின்றன. காலச்சூழ்நிலைக் காரணமாகப் பிரிந்து கிடந்தாலும் இப்போது, ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம். அப்போதுதான் நம்முடைய பலம் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் அறிக்கை ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். நம் நாட்டில் பொருத்தமான நிலை உருவாக்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளால்தான் புதிய உரிமையை நிலை நாட்ட முடியும்.

முதலாளிகளின் கைக்கு அரசியல் சென்றுவிட்டது. இதை எதிா்த்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடிக்கு எதிராகப் போராடும் சூழல் அதிகரித்துள்ளது. இதுவே, நம்மிடையே ஒற்றுமையையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றாா் மகேந்திரன்.

இந்தக் கருத்தரங்கத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல். மக்கள் விடுதலை பொதுச் செயலா் ஜெ. சிதம்பரநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல். விடுதலை மாநிலக் குழு உறுப்பினா் என். குணசேகரன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) மாவோ சிந்தனை மையக்குழு உறுப்பினா் சதீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT