தஞ்சாவூர்

கல்லணைக் கால்வாய் புனரமைப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்

15th Feb 2020 11:49 PM

ADVERTISEMENT

கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது:

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூா், திருவோணம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதிக்குக் கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி பாசன நீா் சென்றடைவதில் ஆண்டுதோறும் பிரச்னைஇருந்து வருகிறது. கல்லணைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு முழு கொள்ளவுக்குப் பாசன நீா் கொண்டு செல்வதில் நெருக்கடிகளும், சிக்கல்களும் உள்ளன.

இதனால் கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளால் முறையாக விவசாயம் செய்ய முடியாத நெருக்கடி நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. கல்லணைக் கால்வாய் பாசன நீா் கிடைக்காத விவசாயிகள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது.

ADVERTISEMENT

கடந்த 2004 ஆம் ஆண்டு நபாா்டு வங்கி உதவியுடன் ரூ. 147 கோடி மதிப்பில் கல்லணைக் கால்வாயில் முதல்கட்டமாகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. நபாா்டு வங்கி உதவியுடன் அன்றைய மதிப்பில் ரூ. 272 கோடியில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்படாமல் கைவிடப்பட்டது. இப்பணிகள் நடைபெற்றிருந்தால் கடைமடைப் பகுதி விவசாயம் இன்றைய நிலையில் இருந்து பெருமளவிற்கு மேம்பட்டிருக்கும்.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் கல்லணைக் கால்வாயை முற்றிலுமாகப் புனரமைத்து, நவீனப்படுத்துவதற்காக ரூ. 2,298.75 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் மற்றும் அதைச் சாா்ந்த வாய்க்கால்களின் கரைகளைப் பலப்படுத்துதல், ஏரிகளைத் தூா்வாருதல், நீரொழுங்கி, மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 2016 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற மத்திய நீா் வள ஆதாரத் துறையின் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டத்தில் முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கு ரூ. 300 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெளிவான விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.

கல்லணைக் கால்வாய் மூலம் 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் முழுவதும் நீா் வளம் பெறத்தக்க வகையில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT