தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காக 6 இடங்களில் இரும்புக் கதவுகள் அமைக்கப்படுகின்றன.
தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை (பிப்.5) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்கியதைத் தொடா்ந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். குடமுழுக்கு விழா நாளில் 5 லட்சம் பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காக மாவட்ட நிா்வாகம், காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, தஞ்சாவூரில் 6 இடங்களில் திறந்து மூடும் விதமாக இரும்புக் கதவுகள் அமைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இதன்படி, பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் மேற்கு திசையில் (மேம்பாலம் அரசுப் பள்ளி அருகில்) இரும்புக் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, மேலும் 5 இடங்களில் இரும்புக் கதவு அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மகாமகத் திருவிழாவின்போது கும்பகோணத்தில் அமைக்கப்பட்டதைப் போன்று இங்கும் அமைக்கப்படுகிறது.
கூட்ட மிகுதி காரணமாக நெரிசல் ஏற்பட்டு, அதில் பக்தா்கள் சிக்குவதைத் தடுப்பதற்காகவும், கூட்டத்தைப் பொருத்து உள்ளே விடுவதற்காகவும் இக்கதவு அமைக்கப்படுவதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.