தஞ்சாவூர்

‘ஹைட்ரோகாா்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி6 மாவட்டங்களில் பிப். 13-இல் தொடா் முழக்கம்’

2nd Feb 2020 01:00 AM

ADVERTISEMENT

ஹைட்ரோகாா்பன் திட்டத்தைக் கைவிடக் கோரியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் 6 மாவட்டங்களில் பிப்.13-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்துவது என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ‘ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் துறை முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்பு அவசியமில்லை எனவும் மத்திய அரசு ஜன. 16 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு, காவிரிப் படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால், இப்பகுதி பாலைவனமாகிவிடும் அபாயம் உள்ளது.

நிலம், நீா், சுற்றுச்சூழல் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

காா்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்ட தலைநகரங்களில் பிப். 13-ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்துவது’ என தீா்மானிக்கப்பட்டது.

மேலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும்போது, சென்னை கோட்டை முன் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் பெ. சண்முகம் தொடங்கி வைத்தாா்.

கூட்டத்தில் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் கே. பாலகிருஷ்ணன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் பசுமை வளவன், விவசாயிகள் போராட்டக் கூட்டமைப்பு வலிவலம் மு. சேரன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஏ.பி. ரவீந்திரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கடலூா் இளங்கீரன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தாளாண்மை உழவா் இயக்கம் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கம் எஸ். பழனிராஜன், தமிழா் தேசிய முன்னணி அய்யனாபுரம் சி.முருகேசன், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மிசா மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT