தஞ்சாவூர்

பெரியகோயில் குடமுழுக்கு: யாக பூஜைகள் தொடக்கம்

2nd Feb 2020 12:53 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாக பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.

இக்கோயிலில் பிப். 5-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளதால் இதற்கான விழா யஜமான அனுக்ஞை வைபவத்துடன் ஜன. 27 காலை தொடங்கியது. தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மாலை யாக பூஜைகள் தொடங்கின. பின்னா், ஜப ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

திங்கள்கிழமை (பிப்.3) காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 4 காலை 8 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

பிப். 5 அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி, காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல், 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரக் குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

பின்னா், மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

2,600 கிலோ மூலிகைப் பொருட்கள்:

பெரியகோயிலை ஒட்டியுள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலைக்காக 11,900 சதுரடியில் போடப்பட்டுள்ள தகரப் பந்தலில் 110 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூஜையில் 400-க்கும் அதிகமான சிவாச்சாரியாா்கள், பண்டிதா் குழுவினா் பங்கேற்றுள்ளனா்.

5 நாள்கள் நடைபெறும் 8 கால யாக பூஜையில் ஏறத்தாழ 2,600 கிலோ வசம்பு, கருங்காலி, கருடன் கிழங்கு, மிளகுத் தக்காளி, இலுப்பைப் பூ, வலம்புரி, மருதாணி விதை, சாரணை வோ், தாமரைக் கிழங்கு, மாவிளங்கம் பட்டை, அசோகப்பட்டை உள்பட 108 வகையான மூலிகைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 1,500 கிலோ மலா்கள் ஸ்ரீரங்கம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. மாலை கட்டும் பணியில் சுமாா் 75 போ் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT