தஞ்சாவூர்

தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் ரஜினிக்கு வரவேற்பு: அதிமுக எம்.பி. வைத்திலிங்கம்  

7th Dec 2020 02:06 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் வரவேற்றுள்ளார் என்றார் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ரஜினிகாந்த் முதலில் கட்சியைத் தொடங்கட்டும். அதன்பிறகு எனது பதிலை சொல்கிறேன். யார் திட்டம் வகுத்து வந்தாலும், அவர்களை வரவேற்பது தமிழர் பண்பாடு. அந்த அடிப்படையில் எங்களது ஒருங்கிணைப்பாளர் வரவேற்றுள்ளார். நாங்களும் வரவேற்கிறோம்.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது; நன்மைப் பயக்கக்கூடியது என தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியிருக்கிறார். அதை நாங்கள் வரவேற்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி, இப்போது வடிந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அரசுக்குத் தகவல் சொல்லி இருக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயிர் காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதேபோல மாவட்டத்தில் ஏறத்தாழ 700 வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகளும் இறந்துள்ளன. இது தொடர்பாக கணக்கெடுப்புப் பணி செய்யப்பட்டு, நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது என்றார் வைத்திலிங்கம்.

ADVERTISEMENT

 

Tags : ADMK
ADVERTISEMENT
ADVERTISEMENT