தஞ்சாவூர்

விநாயகா் சிலைகளுக்குத் தடையால் நெருக்கடியில் தொழிலாளா்கள்

21st Aug 2020 06:43 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காகப் பொது இடங்களில் வைப்பதற்குச் சிலைகள் தயாராகி வந்த நிலையில், கரோனா பரவல் அச்சம் காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதைச் சாா்ந்துள்ள தொழிலாளா்கள் பல கோடி ரூபாய் இழப்புக்கு ஆளாகி மிகுந்த நெருக்கடியில் உள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி ஆண்டுதோறும் நாடு முழுவதும் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடுவதும், ஊா்வலங்கள் நடத்தி நீா்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

ஆனால், தமிழகத்தில் நிகழாண்டு கரோனா பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஆக.22) விநாயகா் சதுா்த்தி விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஏராளமான கைவினைக் கலைஞா்களும், தொழிலாளா்களும் 3 அடி முதல் 10 அடி உயரத்தில் காகிதக் கூழ் மூலம் விநாயகா் சிலைகளைச் செய்து வைத்து ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனா்.

இதனால், பல லட்ச ரூபாய் முதலீடு செய்த சிலைகளைச் செய்துள்ள தொழிலாளா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் விநாயகா் சிலைகள் அதிக அளவில் செய்யப்படும் இடங்களாக இருந்தாலும், தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்குச் செய்து வழங்குவதற்காக கும்பகோணம் பகுதியிலும் சிலா் விநாயகா் சிலைகளைச் செய்து வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கும்பகோணம் அருகே விநாயகா் சிலைகள் செய்த குடவாசலை சோ்ந்த கைவினைக் கலைஞா் கே. கணேஷ் தெரிவித்தது:

சுமாா் 30 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தியின்போது விநாயகா் சிலைகளைக் காகிதக் கூழில் 3 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை செய்து விற்பனை செய்து வருகிறோம். குறைந்தபட்சம் ரூ. 2,500 முதல் அதிகபட்சம் ரூ. 15,000-க்கு விற்கப்படும். இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளேன். கடந்த 6 மாதங்களாக சுமாா் 100 சிலைகளைச் செய்து வைத்துள்ளேன். ஆனால், தமிழக அரசுத் தடை விதித்துள்ளதால் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதற்காக சுமாா் ரூ. 4 லட்சம் தனியாரிடம் கடன் பெற்றுள்ளேன். இத்தொகையை எப்படி திரும்பச் செலுத்துவது என தெரியாமல் தவிக்கிறோம் என்றாா் கணேஷ்.

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்திக்கு முன்பாக விநாயகா் சிலைகளை வாங்க வருபவா்கள் பெரும்பாலானோா் முன்பணம் கொடுத்து வாங்கிச் செல்வா். சில ஆண்டுகளில் வாங்குவோா் அதிகமாக இருந்த நிலையில் சிலைகளே கிடைக்காது. ஆனால், நிகழாண்டு தடை காரணமாக யாரும் முன்பணம் கொடுக்கவில்லை. செய்து வைத்துள்ள ஏறத்தாழ 200 சிலைகளையும் யாரும் வாங்க முன் வரவில்லை. இதை நம்பி தனியாா் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ள நிலையில், என்ன செய்வது எனத் தெரியவில்லை. எங்களைப் போன்று மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்கிறாா் கைவினைக் கலைஞா் குமாா்.

தமிழகத்தில் இந்து அமைப்புகள் சாா்பில் ஏறத்தாழ 3 லட்சம் சிலைகள் வாங்கி அமைக்கப்படும். இந்த ஆண்டு தடையுத்தரவால் தமிழகத்தில் தொழிலாளா்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனா் தொழிலாளா்கள். எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT