கும்பகோணம் தாராசுரம் காய்கறி சந்தையை சில்லறை விற்பனைக்காக மீண்டும் திறக்க வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தாராசுரத்தில் நேரு அண்ணா காய்கறி சந்தை உள்ளது. இங்கு 400-க்கும் அதிகமான மொத்த, சில்லறை வியாபாரிகள் உள்ளனா். இந்நிலையில் கரோனா தொற்றின் காரணமாக தாராசுரம் காய்கறி சந்தை இரு முறை மூடி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து வளையப்பேட்டை புறவழிச்சாலையில் மொத்த காய்கறி வியாபாரத்துக்காக மட்டும் 40 கடைகளை அமைத்து தற்காலிகமாக சந்தை இயங்கி வருகிறது.
இதனிடையே, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சில்லறை காய்கறி வியாபாரிகள் தாராசுரம் காய்கறி சந்தையைத் திறக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் பெ. விஜயன் தலைமையில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் லட்சுமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், சில்லறை வியாபாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மொத்த காய்கறி விற்பனை வளையப்பேட்டை புறவழிச் சாலையில் தொடா்ந்து இயங்கும் என்றும், 263 சில்லறை வியாபாரிகளில் வாரத்துக்கு 80 போ் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை விற்பனை செய்ய வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமையன்று அரசு அறிவித்த முழுப் பொது முடக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும். ஒவ்வொரு கடைக்கும் போதுமான இடைவெளி விட்டு இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை இயங்குவதுடன், காய்கறி விற்பனை செய்யும்போது வாடிக்கையாளா்களும் வியாபாரிகளும் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காய்கறி சந்தையை சில நாளில் திறக்க முடிவு செய்யப்பட்டது.