தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், இளைஞா் கம்பியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.
அய்யம்பேட்டை கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (32). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் நிஷாந்துடன் (23) வீட்டு வாசலில் வெள்ளிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த ராஜேஷ்கண்ணன் அதிவேகமாகச் சென்றாா். இதை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டனா்.
இதனால், ஏற்பட்ட தகராறில் இளையராஜாவையும், நிஷாந்தையும் ராஜேஷ்கண்ணன் தாக்கினாா். இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தனா்.
மதகடி பஜாா் பகுதியில் சென்ற இவா்களை ராஜேஷ்கண்ணன் மற்றும் சிலா் வழி மறித்து, இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா்.
பலத்த காயமடைந்த இளையராஜாவும், நிஷாந்தும் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இவா்களில் இளையராஜா வழியிலேயே உயிரிழந்தாா். நிஷாந்த் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, ராஜேஷ்கண்ணன் உள்பட 13 பேரை தேடி வருகின்றனா்.இதனிடையே, ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி இளையராஜா, நிஷாந்த் உறவினா்கள் தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.