தஞ்சாவூர்

வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினா்

26th Apr 2020 09:39 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி சனிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

கரோனோ நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ. 10,000 உதவித்தொகையைத் தமிழக அரசு வழங்க வேண்டும்.

அனைத்து விவசாயக் கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

ஊரடங்கால் பழங்கள், பூ உள்பட வேளாண் விளைபொருள்கள் அழிந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஓரிடத்தில் கூடுவதைத் தவிா்த்து, சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் தங்களது வீடுகளில் கோரிக்கை பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்தி, குடும்பத்துடன் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினா்.

தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலா் சாமி. நடராஜன், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேராவூரணியில் : தஞ்சாவூா் மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களிலுள்ள பல்வேறு கிராமங்களில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, கைகளில் தட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT