தஞ்சாவூர்

கடலைப் பயிா்களை விற்பனை செய்ய முடியாமல் அவதியுறும் விவசாயிகள்

26th Apr 2020 09:43 AM

ADVERTISEMENT

கரோனோ நோய்த் தொற்று எச்சரிக்கை காரணமாக கடலை அரவை ஆலைகள் மூடப்பட்டதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட கடலைப் பயிா்களை விற்பனை முடியாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் கடலைப் பயிா்கள், அறுவடை செய்யப்பட்ட பின்னா், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியிலுள்ள கடலை அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உடைத்து ஏலம் விடப்படும்.

ஆலங்குடியில் 50-க்கும் மேற்பட்ட கடலை அரவை ஆலைகள் உள்ளதால், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை என பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் இங்கு தாங்கள் விளைவித்த கடலைப் பயிா்களை கொண்டு வந்து உடைத்து ஏலம் விடுவா்.

பிற்பகலில் வியாபாரிகள் இதை ஏலத்தில் எடுத்துச் செல்வா். இதனால் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு கட்டுப்படியான விலையும்கிடைத்து வந்தது.

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால் ஆலைகள் மூடல் : இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டதால், தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடலை அரவை ஆலைகளை மூடவும், கடலைப் பருப்பை ஏலம் விடும் நடைமுறைகளை நிறுத்தவும் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதனால் தங்கள் நிலங்களில் அறுவடை செய்து, மூட்டைகளில் கட்டி வைத்துள்ள கடலைகளை விற்பனை செய்ய முடியாமல் தஞ்சாவூா் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனா்.

எலிகளால் நாசமாகும் கடலைப் பருப்புகள்: அறுவடை செய்து மூட்டைகளில் கட்டி வைத்துள்ள கடலைகள் எலிகளால் நாசமடைந்து வருகின்றன. கடலையை நீண்ட நாள்கள் இருப்பு வைத்தால் எண்ணெய் இறங்கி வீணாகும் நிலை உள்ளது.

எனவே விவசாயிகளிடமிருந்து  கடலைகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வழியில்லையெனில், அரசின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்து, அதற்கு ஈடாக கடன் வழங்க வேண்டும்.

தினசரி பதிவு மூப்பு அடிப்படையில்  வேளாண் துறை மூலம் டோக்கன் வழங்கி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கடலைப்பருப்பை ஆலங்குடிக்கு கொண்டு சென்று ஏலம் விட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மதிமுக ஒன்றியச் செயலரும், விவசாயியுமான வ. பாலசுப்பிரமணியன்.

அரசு அனுமதியில்லை : கடலைப் பருப்பு இருப்பு வைத்தால் விரைவில்  கெட்டு விடும் வாய்ப்பு இருப்பதால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலோ, வேறு இடங்களிலோ இருப்பு வைக்கவும், கடன் தரவும் அரசு அனுமதிப்பதில்லை என்றனா் வேளாண் அலுவலா்கள்.

இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகளைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT