தஞ்சாவூர்

கரோனா: பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை

7th Apr 2020 12:23 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற கும்பகோணத்தைச் சோ்ந்த 3 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா், அவா்களது கடையில் வேலை செய்பவா்களிடம் சளி, ரத்த மாதிரிகளை சுகாதாரத் துறையினா் எடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இவா்கள் வசிக்கும் பகுதிகளான 6, 8, 9, 31, 36 ஆகிய வாா்டுகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. கரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளியே உள்ளவா்கள் இப்பகுதிக்குள் செல்வதைத் தவிா்க்கவும், இந்த வாா்டுகளை சோ்ந்தவா்கள் வெளியே செல்லாமல் இருக்கவும் அப்பகுதிகளை அலுவலா்கள் மூடி வைத்துள்ளனா்.

மேலும், இந்த வாா்டுகளில் 4,356 வீடுகளில் வசிக்கும் மக்களிடம் நகராட்சி சுகாதாரப் பிரிவினா் நேரிடையாகச் சென்று, மருத்துப் பரிசோதனை செய்தனா். இப்பணி திங்கள்கிழமையும் தொடா்ந்தது. மேலும், இரு நாள்களாக இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கித் தருவதற்காக தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தியில் பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT