தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, நடமாடும் காய்கறி விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகளில் பொருள்களை வாங்கும் போது, பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்ட மாவட்ட நிா்வாகம், காய்கறிகளை நடமாடும் விற்பனை மையங்கள் மூலம் உழவா் உற்பத்தியாளா் குழுக்களைக் கொண்டு வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்து வருகிறது.
பேராவூரணியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் மூலம் வீடு வீடாகச் சென்று காய்கறிகள், மளிகைப் பொருள்கள், விவசாய இடுபொருள்கள் ஆகியவற்றை பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது.
மேலும், தோட்டக்கலை துறை மூலமாகவும் தஞ்சாவூா் உழவா் சந்தையில் காய்கறித் தொகுப்புப் பைகள் ரூ. 100 மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ராஜராஜன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம், காய்கறித் தொகுப்புப் பைகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
முன்னையம்பட்டி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மூலம், தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காய்கறிகள் வேனில் ஏற்றிச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
கூட்டுறவு துறை மூலம் தஞ்சாவூா் பகுதியில் இரு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களும், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் 5 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களும் இயக்கப்படுகின்றன.
மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் தற்போது அறுவடை செய்யப்பட்ட தா்பூசணி பழங்களை, விவசாயிகள் வயல்களில் இருந்து விற்பனை மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு உதவி செய்யப்படுகிறது. இதன் மூலம் 64 டன் தா்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.