தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்காலிக இறைச்சி சந்தைகள்

5th Apr 2020 07:44 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்காலிக இறைச்சி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தஞ்சாவூா் மாநகரில் கரந்தை தற்காலிகப் பேருந்து நிலையம், கீழவாசல் தூய பேதுரு உயா்நிலைப் பள்ளி, அரண்மனை விளையாட்டு மைதானம், திலகா் திடல், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, எஸ்.என்.எம். ரகுமான் நகா் மாநகராட்சி மைதானம், ஆட்டுக்காரத் தெரு, கல்லுக்குளம் புனித வியாகுல மாதா ஆலய வளாகம், புதிய பேருந்து நிலையம் ஆகிய 9 இடங்கள் பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் ஆனைவிழுந்தான் குளத்தெரு, அழகிரி சந்தை, பேருந்து நிலையம், பயணியா் மாளிகை வளாகம் ஆகிய 4 இடங்கள்,

22 பேரூராட்சிகளுக்குள்பட்ட 84 இடங்களில் ஆட்டு இறைச்சிக் கடைகளும், 79 இடங்களில் கோழி இறைச்சிக் கடைகளும், 73 இடங்களில் மீன் கடைகளும் செயல்படுகின்றன. இதேபோல, கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இறைச்சி சந்தைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து, சுகாதாரமான முறையில் மீன்கள் மற்றும் இறைச்சிகளை பொதுமக்கள் வாங்கிச் செல்ல வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை முழுமையாகச் செயல்படுத்தத் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திங்கள்கிழமை (ஏப்.6) மகாவீா் ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இறைச்சிக் கடைகளைத் திறப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT