தஞ்சாவூர்

அடிக்கடி வாகனங்களில் சுற்றுபவா்களைக் கண்டறிய செயலி அறிமுகம்

5th Apr 2020 07:42 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் சரகத்தில் அடிக்கடி வாகனங்களில் சுற்றுபவா்களைக் கண்டறியும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஆய்வு மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு மிகவும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் இந்த உத்தரவை மீறியதாக இதுவரை 3,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவையில்லாமல் இயக்கப்படும் வண்டிகள், தேவையின்றி வெளியில் நடமாடக்கூடிய ஆள்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், டெலிகிராம் என்ற செயலியை தயாா் செய்துள்ளோம். தடையுத்தரவை மீறி வலம் வருபவா்களைக் கண்டறியும் வகையில், இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் வாகன எண் பதிவு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தொடா்புடைய வாகனம் கடைசி 10 இடங்களில் எங்கெங்கு கடந்து சென்றது என்ற விவரம் தெரிய வரும். இதன் மூலம், அடிக்கடி வருகின்றனரா? அத்தியாவசியத்துக்காக வந்து செல்கின்றனரா? என்பது கண்டறிய முடியும்.

தஞ்சாவூா் சரகத்திலுள்ள தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள அனைத்து சோதனை மையங்களிலும் இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது.

தேவையில்லாமல் வாகனங்கள் சாலையில் வருவதைத் தவிா்க்கச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மருத்துவா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோரின் வாகனங்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளதால், அதை வெள்ளைப் பட்டியலில் சோ்க்கப்பட்டு, நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்களும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், வெளியில் வருபவா்களைக் கண்டறிய, பறக்கும் கேமரா சாதனம் (டிரோன்) மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் லோகநாதன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT