தஞ்சாவூர்

பாலியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்

22nd Sep 2019 03:34 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்குமாறு காவல் அலுவலர்களை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் (சென்னை) பழனிக்குமார் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மூன்று மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
 இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து, குற்றப்பத்திரிகையை 60 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  குற்றவாளிகள் மீது விரைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்குகளில் அறிவியல் ரீதியாக தடயங்களைச் சேகரித்து வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமார் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், அன்பழகன், முருகேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் அண்ணாதுரை, ஸ்ரீகாந்த், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT