தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பில் உள்ள ராணி வாய்க்காலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரகத்தில் சிஐடியு அமைப்பினர் வலியுறுத்தினர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் க. அன்பு உள்ளிட்டோர் அளித்த மனு:
தஞ்சாவூர் காந்திஜி சாலை அருகே 40 அடி அகலமுள்ள ராணி வாய்க்கால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், வாய்க்காலின் தலைப்பு வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்காக முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாறிவிட்டது. இதுதொடர்பாக எங்களுடைய போராட்ட அறிவிப்பின் காரணமாக 2012, நவ. 23-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகளில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசம் இன்றி அகற்ற வேண்டும் என உள்ளது. இதை நடைமுறைப்படுத்த அலுவலர்கள் தயக்கம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். எனவே, இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.