தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் வேலைவாய்ப்பு முகாம்: 70 சதவீதம் பேருக்குப் பணி

17th Sep 2019 09:04 AM

ADVERTISEMENT

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த வேலைவாய்ப்பு முகாமில் 2020 ஆம் ஆண்டில் படிப்பை முடிக்கவுள்ள 70 சதவீத மாணவ, மாணவிகளுக்குப் பணி வாய்ப்புக் கிடைத்தது.
இப்பல்கலைக்கழகத்தில் வளாக வேலைவாய்ப்பு தேர்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கியது. இதில், 2020 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ள சுமார் 2,450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், அமேசான், பேபால், மைக்ரோசாப்ட், டெலாய்ட், ராக்வெல் காலின்ஸ், டைகர் அலைட்டிக்ஸ், ஜியோபோர்டு, ஏபிசிஓ, இன்வர்மேட்சிகா, டி.சி.எம்., ஐ.பி.எம்., சோகா, பிரஸ்ஒர்க்ஸ், இன்போசிஸ், காக்னிசன்ட், விப்ரோ, கேட்டர் பில்லர், டாக்டர் ரெட்டி போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டன. 
இதுகுறித்து பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை முதன்மையர் வெ. பத்ரிநாத் தெரிவித்தது: நிகழாண்டு வேலைவாய்ப்பு முகாம் தொடங்கிய 70 நாட்களில் 2020 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ள 70 சதவீத மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பைப் பெற்றனர். 
இவர்களில் 350-க்கும் அதிகமான தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், 500-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களும் முக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 28.5 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் விதமான வேலைவாய்ப்பைப் பெற்றனர். சராசரியாக ஒருவருக்கு ரூ. 9.30 லட்சம் ஆண்டு வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.இதையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொறியாளர் தின விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக ஆலோசகர் திலீப் மால்கேடேவும், வேலைவாய்ப்புக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளும் இணைந்து பலூன்களைப் பறக்கவிட்டு கொண்டாடினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT