இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்பது தமிழை அழிக்கும் செயல் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
இந்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி நாளையொட்டி சுட்டுரையிலும், விழா உரையிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும், இந்தியாவின் அடையாளத்தை உலகெங்கும் தெரிவிப்பதற்கும் இந்தியால் மட்டுமே முடியும் எனக் கூறியுள்ளார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் முரணானவை. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 343, இந்திய ஒன்றிய அரசின் அலுவலகங்களில் பயன்படுத்தும் மொழியாக இந்தியையும், அடுத்த நிலையில் ஆங்கிலத்தையும் கூறுகிறது. இந்தியை தேசிய மொழி என அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.
இந்தி மொழி பரப்பும் வாரம், சம்ஸ்கிருத மொழி பரப்பும் வாரம் என இந்திய அரசு கடைபிடிப்பது இனப்பாகுபாடு காட்டும் செயல். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புவதற்கான"இந்திய மொழிகள் வாரம்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்திய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு இந்தியில் பேசுங்கள் என வலியுறுத்துவது தமிழ் போன்ற தொன்மை வாய்ந்த மொழிகளை அழிக்கும் செயல். உலக அளவில் இந்தி மொழியால் மட்டும்தான் இந்தியாவின் அடையாளம் காணப்பட வேண்டும் என பாஜக ஆட்சியாளர்கள் விரும்புவது தமிழினம் போன்ற பல்வேறு இன அடையாளங்களை மறுப்பது மட்டுமின்றி, அழிப்பதுமாகும்.
எனவே, தமிழர்கள் தங்கள் இனத்துக்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல், தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்.