தஞ்சாவூர்

கடைமடைப் பகுதியில் ஏரி, குளங்கள்  நிரம்பாததால் விவசாயிகள் விரக்தி: போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

13th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணை நிரம்பியும் கடைமடைப் பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இப்பிரச்னையை கண்டுக்கொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி என  விவசாயிகள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம்,  சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியங்களில்  பெருமகளூர் பெரிய ஏரி,  பட்டங்காடு பெரிய ஏரி,  தூராங்குடி மைனர் ஏரி,  பாப்பாங்குளம், தென்பாதி ஏரி,  செம்மங்குடி ஏரி,  சோலைக்காடு ஏரி,  ருத்ரசிந்தாமணி ஏரி, குளக்குடி ஏரி, கொரட்டூர் ஏரி, விளங்குளம் ஏரி, ஊமத்தநாடு ஏரி, கைவனவயல் ஏரி என நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படாததாலும், வரத்து வாய்க்கால்கள் அடைபட்டுக் கிடப்பதாலும், ஏரிகளில் நெய்வேலி காட்டாமணக்கு,  சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. 
இதனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. அத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை சரிவர பெய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக காவிரி நீர் முறையாக இப்பகுதிக்கு வந்து சேராததால் விவசாயமும் செய்ய முடியவில்லை .
இந்நிலையில்,  கடந்த மாதம் 13 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், கல்லணையிலிருந்து 17ஆம் தேதி தண்ணீர்  திறக்கப்பட்டது.  கடைமடை பகுதிகளில் சில இடங்களுக்கு தண்ணீர் குறைவாகவும், ஒருசில இடங்களுக்கு ஓரளவும் சென்றன. இருப்பினும், கடந்த சில நாள்களாக உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலந்து வருகிறது. 
ஆனால்,  கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை.
இதனால், விரக்தி அடைந்த அடைந்த விவசாயிகள் அதை வெளிப்படுத்தும்விதமாக,  
"" கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் கானல் நீர் தானோ, ஏரிகளில் எருக்கஞ்செடிகாடுகள், வரத்து வாய்க்கால்கள் புதர் மண்டிக்கிடக்கும் அவலம், கடைமடை விவசாயிகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள்,  எம்.பி.,  எம்.எல்.ஏ., அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்'' என பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் வியாழக்கிழமை போஸ்டர்  ஒட்டியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT